பதிவு செய்த நாள்
28
பிப்
2012
11:02
கும்பகோணம்: கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் ஸ்வாமி கோவில், வியாழசோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய மூன்று சிவன் கோவில்களில், மாசிமகப் பெருந்திருவிழா நேற்று (27ம்தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. சோழ வளநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் வரிசையில், 26வது திருத்தலமாக திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருவராலும் பாடப்பெற்ற தலமாக கும்பகோணம் ஆதிகும்பேஸ்வர ஸ்வாமி திருக்கோவில் திகழ்கிறது. ஆன்மாக்கள் உய்வு பெற சிவபெருமான் நான்முகன் படைப்பிற்குக் காரணமாகிய, ஜீவ வித்துக்களை அமுத கும்பத்துள் வைத்துத் தந்து, அதனையே சிவலிங்க மூர்த்தமாக அமைத்து தம்மை தாமே வழிபட்ட தலம் என்ற சிறப்புடையது. 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாகி, அதை 51 பாகங்களாக்கி தன்னுருவில் தாங்கி நின்று அருளாட்சி செய்யும் ஆதிதியானவர், இங்கு மந்திர பீடேஸ்வரியாய் சர்வமங்களத்தை அளிக்கும், மங்களாம்பிகையாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் தலமாகும். இத்தகைய சிறப்புடைய இக்கோவில் மூலமே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகத் திருவிழா நடக்கிறது. அத்துடன் ஆண்டுதோறும் நடந்து வரும் மாசிமக பெருந்திருவிழா இக்கோவிலை முன்னிறுத்தியே நடக்கிறது. இத்தகைய சிறப்புடைய கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஸ்வாமி திருக்கோவிலில், நேற்று முன்தினம் பூர்வாங்க பூஜைகளுடன் மாசிமகப்பெருந்திருவிழா ஆரம்பமானது. இதைத்தொடர்ந்து நேற்று 27ம் தேதி காலை ஒன்பது மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதை முன்னிட்டு பஞ்சமூர்த்திகளும் கொடிமரத்தின் அருகே எழுந்தருளியவுடன் கொடியேற்றம் நடந்தது. வரும் மார்ச் எட்டாம் தேதி வரை நடக்கவுள்ள, இவ்விழா நாட்களில் சேஷ, கமல, பூத,கிளி, யானை, மூஷிகம், மயில், ரிஷபம், ஓலைச்சப்பரம், கைலாச, குதிரை போன்ற பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி வீதியுலா நடக்கிறது. விழாவில் கும்பபேஸ்வரர் கோவிலில் உள்ள ஐந்து திருத்தேர்களில் விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து திருத்தேர்கள், வரும் ஐந்தாம் தேதி காலை 7.30 மணிக்கு ஸ்வாமி திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டு திருத்தேரோட்டம் நடக்கிறது. ஆறாம் தேதியும் திருத்தேரோட்டம் நடக்கிறது. வரும் ஏழாம் தேதி மாசிமகத்தை முன்னிட்டு, அன்று பகல்10.30 மணிக்கு மேல் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்வாமிகள் மகாமக திருக்குளத்தில் எழுந்தருளியவுடன், மாசி மக தீர்த்தவாரி நடக்கும். இதேபோல், கும்பகோணத்தில் மகாமகத் தொடர்புடைய, சோமநாயகி சமேத வியாழசோமேஸ்வரர், அமிர்தவல்லி அம்பாள் சமேத அபிமுகேஸ்வரர் ஆகிய மூன்று திருக்கோயில்களில் மாசிமகப்பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்றம் நடந்தது.