சபரிமலை: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். கோயிலை வலம் வந்து 18-ம் படி வழியாக சென்று ஆழிக்குண்டத்தில் நெருப்பு வளர்த்தார். பக்தர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பிரசாதம் வழங்கினார். வேறு பூஜைகள் நடக்கவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் நெய் அபிஷேகம் தொடங்குகிறது. மாலையில் தீபாராதனை, அத்தாழபூஜை நடக்கும். ஐந்து நாட்களும் இதே பூஜைகளும், இரவு 7:00 மணிக்கு படிபூஜையும் நடக்கும். பிப்.,17 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன் 100 போலீசார் மட்டுமே மாத பூஜை காலத்தில் பணியில் ஈடுபட்டனர். தற்போது சன்னிதானம், பம்பை, நிலக்கல்லில் மூவாயிரம் போலீசார் பணியில் உள்ளனர். நேற்று காலை 10:00 மணிக்கு பிறகுதான் நிலக்கல்லில் இருந்து ஊடக வாகனங்கள் பம்பைக்கு அனுமதிக்கப்பட்டன. நேற்று பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இளம்பெண்கள் வந்தால் தடுக்க பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் முகாமிட்டுள்ளனர்.