பதிவு செய்த நாள்
14
பிப்
2019
03:02
சத்தியமங்கலம்: ஆதி கருவண்ணராயர், பொம்மாதேவி கோவில், மாசி மாத திருவிழாவை முன்னிட்டு, நேற்று (பிப்., 13ல்) பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. பவானிசாகர் வனச்சரகம், தெங்குமரஹடா செல்லும் வழியில், கெஜலட்டி வனப்பகுதியில், ஆதி கருவண்ணராயர் பொம்மாதேவி கோவில் உள்ளது.
கோவிலில், ஆண்டுதோறும், மாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், உப்பிலிய நாயக்கர் சமூகத்தை சேர்ந்த மக்கள், ஏராளமானோர் வருவர். இந்தாண்டு வரும், 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள், கோவில் திருவிழா நடக்க உள்ளது. நேற்று (பிப்., 13ல்) காலை கோவில் தர்மகர்த்தா, அம்மாசை நாயக்கர், பன்னீர்செல்வம், மூர்த்தி, சத்திவேல் ஆகியோர் முன்னிலையில், பூச்சாட்டுதல் நடந்தது.
தொடர்ந்து வரும், 18 மாலை 5:00 மணிக்கு ஹோமம் மற்றும் மகா அலங்கார பூஜைகள் நடக்கின்றன. இரவு, 11:00 மணிக்கு, தீர்த்த ஊர்வலமும், 19ல், பொங்கல் விழாவும், 20ல், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.