பதிவு செய்த நாள்
16
பிப்
2019
02:02
ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவுக்கு, போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் திருவிழா கடந்த, 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை, 17ம் தேதி நள்ளிரவு, 1:00 மணிக்கு மயான பூஜை நடக்கிறது.வரும், 20ம் தேதி காலை 9:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்காக போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
வால்பாறை டி.எஸ்.பி., சுப்ரமணியன் கூறியதாவது:கோவில் வளாகம், குண்டம் இறங்குமிடம், மயான பூஜை நடக்கும் இடங்களில், அதிக அளவு பேரி கார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர், 300 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளனர்.முக்கோணம் பகுதியில் மக்களுக்காக, காவல் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. ஆனைமலை பழைய பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்களுக்கும், அரசு மேல்நிலைப்பள்ளியில் பக்தர்களின் வாகனங்களுக்கும் பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பார்க்கிங், குண்டம் இறங்குமிடத்தில் மொபைல் டாய்லெட் அமைக்கப்படும். பக்தர்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில், 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.குண்டம் இறங்கும் நாளில், போக்குவரத்து ஸ்தம்பிப்பதை தடுக்க, முக்கோணத்தில் இருந்து சேத்துமடை ரோட்டில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, மாற்றுப்பாதையில் அனுப்பப்படும்.கோவிலில் நடக்கும் சிறப்பு பூஜைகளை மக்கள் கோவில் வளாகத்தின் வெளியில் இருந்து காண்பதற்கு வசதியாக எல்.இ.டி., டிவிக்கள் பொருத்தப்படும். தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ்கள், மருத்துவர் குழுவுடன் தயார் நிலையில் இருக்கும்.இவ்வாறு, தெரிவித்தார்.