பதிவு செய்த நாள்
29
பிப்
2012 
11:02
 
 திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோவிலில், பூமிக்கடியில் தற்போதுள்ள பாதாள அறைகளைத் தவிர, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பலத்த பாதுகாப்பு கொண்ட புதிய பாதாள அறை அமைக்க, நிபுணர்குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்தான முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையைத் தயாரித்து, சுப்ரீம் கோர்ட் அனுமதிக்காகத் தாக்கல் செய்யப்பட உள்ளது. கேரளா, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பூமிக்கடியில், தங்க, வைர, ரத்தின பொக்கிஷங்கள் உள்ளன. அவற்றை மதிப்பீடு செய்ய, நிபுணர்குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. இக்குழு, 20ம் தேதி முதல் அங்குள்ள பாதாள அறைகளில் "எப் மற்றும் "இ அறைகளைத் திறந்து மதிப்பீடு செய்யும் பணிகளை முடித்துள்ளது. இந்நிலையில், தற்போதுள்ள அறைகளை விட, மேலும் ஒரு அறையை அங்கு அமைக்க நிபுணர்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான கூட்டத்தில், நிபுணர்குழு உறுப்பினர்களுடன், கண்காணிப்புக்குழு தலைவர் நீதிபதி கிருஷ்ணன், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். புதிய அறை எங்கு அமைப்பது என்பது குறித்தும், அதற்கான இடத்தையும் நிபுணர்குழு கண்டறிந்துள்ளது. புதிய அறையை எப்படி அமைப்பது, அதில் என்னென்ன அதிநவீன பாதுகாப்புக் கருவிகள் பொருத்துவது, அதற்கான வரைபடம், செலவு போன்றவை குறித்து, முழுவிவர அறிக்கையை மூன்று வாரத்திற்குள் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அறிக்கை கிடைத்தவுடன், அதன் அடிப்படையில் நிபுணர்குழு தயாரிக்கும் மற்றொரு அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, புதிய பாதாள அறை அமைப்பதற்கான அனுமதி பெறப்படும். அறை அமைப்பதற்கான செலவு உட்பட பல்வேறு விஷயங்கள் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நிபுணர்குழு ஒருங்கிணைப்பாளர் வேலாயுதன் நாயர் தெரிவித்தார்.