பதிவு செய்த நாள்
29
பிப்
2012 
11:02
 
 பவானி: பவானியில், சிறுவர்களுக்கு பொம்மை திருமணம் செய்து வைத்து, வினோத வழிபாடு நடந்தது.திருச்சி மாவட்டம், தொட்டியம், கவரப்பட்டியைச் சேர்ந்த தெருக்கூத்துக் கலைஞர்கள், காலிங்கராயன்பாளையத்தில் உள்ள அருளரசி அம்மன் கோவில் வாயிலில், ஜனவரி 30ம் தேதி முதல் சிறப்பு வழிபாடு பூஜையை துவங்கினர். அன்று முதல், "பொன்னர் - சங்கர் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட தெருக்கூத்து நிகழ்ச்சி, தினமும் இரவில் நடத்தப்பட்டது. நேற்று இரவு, பொன்னர் - சங்கர் சகோதரர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் வைபவம் நடந்தது. அதன்படி காலிங்கராயன்பாளையம், மணக்காட்ர், லட்சுமிநகரில் வசிக்கும் ஐந்து குடும்பங்களில் இருந்து, சிறுவர், சிறுமியர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மணமகன், மணமகள் வேடமிட்டு, கோவில் வாயிலில் வைத்து, பொம்மை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அந்தணர் வேடமணிந்த சிறுவன், யாகம் வளர்த்து, திருமணத்தை நடத்தினான். அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் அட்சதை தூவி, மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து, அனைவரும் மொய்ப்பணம் எழுதினர். இந்தப் பணம் கோவிலுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள், குடும்பத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.ஈரோடு மாவட்டம், பவானி அருகே, காலிங்கராயன்பாளையம், மணக்காட்ர், லட்சுமி நகர் பகுதி மக்கள், காலிங்கராயன் பாளையத்தில் உள்ள அருளரசி அம்மன் கோவிலில், வினோமான கூட்டு வழிபாடு பூஜை நடத்தினர். நாட்டில் மழை பெய்யவும், குடும்பங்களில், சுபகாரியங்கள் நடக்கவும், திருமணத் தடை நீங்கவும் இந்த வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.