குன்னுார்:குன்னுார் சவுடேஸ்வரியம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழா நடந்தது. குன்னுார் மவுன்ட்ரோடு பகுதியில் அமைந்துள்ள சவுடேஸ்வரியம்மன் கோவிலில், கடந்த, 17ல் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து அம்மன் பண்டிகை துவங்கியது. இதில் சிம்ம வாகன கொடியேற்றம் நடந்தது. மகளிரணியை சேர்ந்த ஜோதி, சரஸ்வதி, மகேஸ்வரி ஆகியோர் தலைமையில், சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து, 108 பால்குட ஊர்வலம், கருமாரியம்மன் கோவிலில் இருந்து சீர்தட்டு மற்றும் பண்மர தட்டுகள் மங்கள வாத்திய இசையுடன் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, சவுடேஸ்வரியம்மன் மகளிரணி சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது.நேற்று முன்தினம் கன்னிமாரியம்மன் கோவிலில் இருந்து சவுடேஸ்வரியம்மன் கோவிலுக்கு அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், சக்தி சாமுண்டி அம்மனை நடன குதிரை மேல் வைத்து மூக்கனுார் கணக்கம்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி வீர குமாரர்கள் குழு அலகு சேவையுடன், பக்தி பரவசத்துடன் அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
பக்தர் கிருஷ்ணன் சக்தி கரத்தை ஏந்தி வர, வீர குமாரர்கள் கத்தி போட்டு ஆடல் பாடல்களுடன் நகர் வலம் வந்தனர். நேற்று தீயணைப்பு நிலைய விநாயகர் கோவிலில் இருந்து மாவிளக்கு, இளநீர் தீப ஊர்வலம், சவுடேஸ்வரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா ஆகியவை நடந்தன. அர்ச்சகர் குணசேகர சாஸ்திரிகள் தலைமையில் சர்வ சாதகங்கள் நடந்தது.இன்று மஞ்சள் நீராடலுடன் விழா நிறைவு பெறுகிறது. நாளை முதல், 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.ஏற்பாடுகளை தேவாங்க சமூக சங்கத்தினர், சவுடேஸ்வரியம்மன் மகளிர் நற்பணி மன்றத்தினர் மேற்கொண்டுள்ளனர்.