பதிவு செய்த நாள்
29
பிப்
2012
11:02
மதுரை:மதுரை கீழமாசி வீதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலின் சுவாமி, அம்மன் தேர்கள் நிறுத்தப்பட்டுள்ள பழமையான மண்டபங்கள் ரூ.7 லட்சத்தில் புதுப்பிக்கப்படுகின்றன. முதன்முறையாக கலசத்துடன்கூடிய கோபுரங்கள் கட்டப்பட்டு, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.சித்திரைத் திருவிழாவில், மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மறுநாள் தேரோட்டம் நடக்கும். அன்று சுவாமி சுந்தரேஸ்வரரின் பெரிய தேரும், மீனாட்சி அம்மனின் சிறிய தேரும் அடுத்தடுத்து மாசிவீதிகளில் ஆடி அசைந்து வரும். இந்நிகழ்ச்சிக்காக அன்று அதிகாலை 5 மணிக்கு, அம்மன், சுவாமி சிலைகளை தேர்களில் வைப்பதற்காக மன்னர் திருமலை நாயக்கரால் இரு மண்டபங்கள் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. செங்கல், கடுக்காய், சுண்ணாம்பு காரையால் உருவாக்கப்பட்ட பழமையான இம்மண்டபங்கள் சேதமடைந்துள்ளன. சுவாமி தேர் மண்டபத்தின் மேற்பகுதியில் மரவேர் ஊடுருவி, ஆபத்தை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, ரூ.7 லட்சத்தில் இரு மண்டபங்களை புதுப்பிக்க கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் உத்தரவிட்டார். சீர்காழி ரமேஷ் ஸ்தபதி தலைமையில் தற்போது சுவாமி தேர் மண்டபம் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. மண்டபத்தில் "ம் வடிவ கோபுரம் புதிதாக அமைக்கப்படுகிறது. இதில் சுதைகளும், மண்டப சுவர்களில் பூதங்கள், நந்தி சிலைகள் வைக்கப்படுகின்றன. சித்திரைத் திருவிழாவிற்குள் இருமண்டப கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.