ஸ்ரீநிவாச பத்மாவதி திருக்கல்யாணம் விமரிசையாக திருமலையில் நடந்து கொண்டிருந்தது. மணமகள் பத்மாவதி மணவறையில் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை. ‘வெட்கத்தால் கொடிபோல குனிந்து கிடக்கிறாளே’ என்று அனைவரும் எண்ணினர். ஆனால், அவள் ஸ்ரீநிவாசனின் முக அழகை இமைக்காமல் ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். அவளது கழுத்தில் கிடந்த ரத்னமாலையின் மத்தியில் பளபளப்பான டாலர் இருந்தது. அதில் மணிவண்ணனான ஸ்ரீநிவாசனின் முகம் ‘பளபள’ என்று பிரதிபலித்தது. ‘அந்தக்கள்ளி’ குனிந்ததலை நிமிராமல் அந்த பிம்பத்தையே ரசித்துக் கொண்டிருந்தாள்.