பதிவு செய்த நாள்
01
மார்
2012
11:03
சத்தியமங்கலம் : சத்தி, அரியப்பம்பாளையம் செல்லாண்டி அம்மன் கோவில் குண்டம் விழா நடந்தது. அரியப்பம்பாளையம் செல்லாண்டி அம்மன், சக்தி மாரியம்மன் கோவிலில், 14ம் தேதி பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா துவங்கியது. 21ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று அதிகாலை நடந்தது. பூமிதிக்கும் பக்தர்கள் பவானியாற்றில் நீராடி, ஈர ஆடையுடன் கையில் வேப்பிலையோடு கோவிலுக்கு வந்தனர். கோவிலின் தலைமை பூசாரி ஈஸ்வரன் குண்டத்துக்கு பூஜை செய்து, பூமிதிக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவியர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பூமிதித்தனர். குண்டம் விழாவை முன்னிட்டு கோவில் வாளகத்தில் பத்தாயிரம் பக்தர்களுக்கு, ஸ்ரீ செல்லாண்டி அம்மன் அன்னதானக்குழு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். மாலை அக்கினி கும்பம், இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி நடந்தது. அப்போது, அரியப்பம்பாளையம், புளியம்பட்டி பிரிவில் வாண வேடிக்கை நடந்தது. இன்று மஞ்சள் நீர் உற்சவம், இரவு பாரிவேட்டை, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. மார்ச் 6ம் தேதி மறுபூஜையுடன் குண்டம் விழா நிறைவடைகிறது.