பதிவு செய்த நாள்
01
மார்
2012
11:03
பொள்ளாச்சி :பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று திருக்கல்யாணம் நடந்தது. பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டி மாரியம்மன் கோவிலில் கடந்த 14ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்றுமுன்தினம் சக்தி கும்பம் அழைத்து வரும் நிகழ்ச்சியும், பக்தர்கள் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில், மஞ்சள் நிற பட்டு புடவையில் எழுந்தருளிய அம்மனுக்கு முன்னதாக அபிஷேக பூஜை நடந்தது. ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து அதிகாலை 4.00 மணிக்கு சீர் வரிசை கொண்டு வரப்பட்டது. காலை 6.00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணமும், பின், மகாதீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடந்தன. காலை 7.00 மணி முதல் பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்களும் அம்மனுக்கு மாவிளக்கு கொண்டு வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 4.00 மணிக்கு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 9.00 மணிக்கு கம்பம், கும்பம் கங்கையில் விடுதல் நிகழ்ச்சியும், விழாவையொட்டி, சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. இன்று காலை 8.00 மணி முதல் அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராடும் விழாவும் நடக்கிறது. நாளை (2ம் தேதி) காலை 11.00 மணிக்கு அபிஷேக பூஜையும், பகல் 12.00 மணிக்கு அலங்கார தீபாராதனையுடன் விழா நிறைவடைகிறது.
விழாவுக்கான ஏற்பாட்டை பொதுமக்களும், விழாக்குழுவினரும் செய்தனர்.