பதிவு செய்த நாள்
05
மார்
2019
02:03
சேலம்: மஹாசிவராத்தியான நேற்று (மார்ச்., 4ல்) இரவு, சேலம் சுகவனேஸ்வரர் கோவில், கடை வீதி காசி விஸ்வநாதர் கோவில், உத்தமசோழபுரம் கைலாசநாதர் கோவில், சீரகாபாடி, 1,008 சிவாலயம், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில் உட்பட சேலம் மாநகர், மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இரவு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால், போலீஸ் பாதுகாப்பு அதிகளவு போடப்பட்டிருந்தது.
* கொட்டவாடி பேளூர் கரடிப்பட்டி கருணாகரரேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா நடந்தது. இதேபோல, வாழப்பாடி காசிவிஸ்வநாதர் கோவில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டேஸ் வரர், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர், கல்யாணகிரி தேன்மலை சிவாலயம் ஆகிய கோவில் களிலும் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
* உத்தமசோழபுரம் சமேத கரபுரநாதர் கோவிலில், மஹா சிவராத்திரியான நேற்று (மார்ச்., 4ல்) இரவு, 9:30 மணிக்கு சிவ மந்திர ஜபம் செய்து, கலசங்களில் வைத்திருந்த புனித நீரை சிவாச்சாரியார் மூலவருக்கு அபிஷேகம் செய்தார்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேட்டூர் அருகே, கொளத்தூர் அடுத்த பாலவாடியில் பழமையான சித்தேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று (மார்ச்., 4ல்), 1,008 சங்குகளை கொண்டு, ஆறு அடி உயர சிவலிங்கம் உருவாக்கப்பட்டு கோவில் வளாகத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டது. கொளத்தூர், மேட்டூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், நேற்று (மார்ச்., 4ல்)இரவு சங்கு சிவலிங்கத்தை வழிபாடு செய்தனர். இதுதவிர, மேட்டூர் மீனாட்சி சொக்கநாதர் கோவில், அச்சங்காடு நெல்லீஸ்வரர் கோவில், பாலவாடி ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்பட கொளத்தூர், மேச்சேரி சிவன் கோவில்களில் விடிய, விடிய பூஜைகள் நடந்தன.
* ஆத்தூர், கைலாசநாதர் கோவிலில் நேற்று (மார்ச்., 4ல்),, மஹா சிவராத்திரி உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு மாலை, 6:00 மணி, இரவு, 10:00 மணி முதல், அதிகாலை, 4:00 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்காரம் நடந்தது. அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ் வரர், வெள்ளை விநாயகர் கோவில் மகாலிங்கேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதியிலுள்ள சிவன் கோவில்களில் மஹா சிவராத்திரி பூஜை நடந்தது.
* தலைவாசல் அருகே ஆறகளூர், தேவியாக்குறிச்சி, கூகையூரில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில், சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதிகாலை முதலே மூலவருக்கு பால், தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபி?ஷகம் நடந்தது. தேவியாக்குறிச்சியில் உள்ள சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில், ஒரு லட்சம் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.