பதிவு செய்த நாள்
05
மார்
2019
02:03
தஞ்சாவூர்: மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பிரகன் நாட்டியாஞ்சலி நேற்று துவங்கியது. தஞ்சாவூர் பெரியகோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, கடந்த 15 ஆண்டுகளாக பிரகன் நாட்டியஞ்சலி பவுண்டேசன்,தென்னக பண்பாட்டு மையம்,அரண்மனை தேவஸ்தானம் ஆகியவை இணைந்து பிரகன் நாட்டியஞ்சலி நிகழ்ச்சியை நடத்துகிறது.
இதன்படி நேற்று மாலை 6.15 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்கியது. அதை தொடர்ந்து இன்று(5ம் தேதி) அதிகாலை 5.30 மணி வரை, கதக், மோகினி ஆட்டம், ஒடிசி, குச்சிப்புடி, சத்திரியா ஆகிய நடனங்கள் நடைபெற்றன. இதில் டில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, சத்தீஸ்கர், அஸ்ஸாம் ஆகிய பகுதிகளிலிருந்து புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் கலந்துக் கொண்டனர். இதை தவிர, தஞ்சாவூர், பிற மாவட்டங்களில் உள்ள நாட்டியப் பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வரும் 10ம் தேதி வரை மாலை 6.15 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை நாட்டியஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.7 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில், 37 குழுக்களில், 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடனக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.