பதிவு செய்த நாள்
07
மார்
2019
03:03
கிருஷ்ணகிரி: பூங்காவனத்தம்மன் கோவில் மயான கொள்ளைத் திருவிழாவில், பல லட்சம் பேர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தாம்சன் பேட்டை பூங்காவனத்தம்மன் கோவில், மயான கொள்ளை திருவிழா, நேற்று (மார்ச்., 6ல்)நடந்தது. நேற்று (மார்ச்., 6ல்) காலை, முகவெட்டு எடுத்து, தென்பெண்ணை ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
முதுகில் அலகு குத்தியபடி உரல், தேர், சங்கிலி ஆகியவற்றை இழுத்து வேண்டுதல் நிறை வேற்றினர். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், காளி வேடமணிந்து சென்றனர். மதியம், 3:00 மணிக்கு, கோவிலில் இருந்து, பூத வாகனத்தில் தென்பெண்ணை ஆற்றை நோக்கி, மயான கொள்ளைக்கு அம்மன் புறப்பட்டார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள அண்ணாசிலை அருகே நிறுத்தப்பட்டது.
அங்கு அமைக்கப்பட்டிருந்த கயிறு மூலம், முதுகில் அலகு குத்திக்கொண்டு, அந்தரத்தில் தொங்கியபடி, பறந்து சென்று, சுவாமிக்கு மாலை அணிவித்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, மாலை வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.