பதிவு செய்த நாள்
11
மார்
2019
12:03
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுடன், லோக்சபா தேர்தல் திருவிழாவும் இணைந்து வருகிறது. ஏப்., 18 தேரோட்டத்தன்று லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவும் நடக்கிறது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தாண்டு திருவிழா ஏப்.,15 கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ஏப்.,15 மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.,16 மீனாட்சி அம்மன் திக்கு விஜயம், ஏப்., 17 மீனாட்சி சுந்தரஷே்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது.தேரோட்டமும், ஓட்டுப்பதிவும்முக்கிய நிகழ்வாக தேரோட்டம் ஏப்.,18 ல் நடக்கிறது. வைகை ஆற்றில் எழுந்தருள தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் வரும் கள்ளழகரின் எதிர்சேவையும், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவும் ஏப்.,18 ல் நடக்கிறது. மறுநாள்(ஏப்., 19) கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா நடக்கிறது.முக்கிய திருவிழாக்கள், பள்ளி பொதுத்தேர்வுகள், கல்லுாரி,பல்கலை செமஸ்டர்கள் இல்லாத நாட்களை கவனத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
இந்நிலையில் சித்திரை திருவிழா தேரோட்டத்தன்று ஓட்டுப்பதிவு நடப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படும். மேலும் மதுரை மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் தேரோட்டத்தன்று மதுரையில் குவிவர். மீனாட்சி அம்மன், சுந்தரஷே்வரர் தேர்கள் செல்லும் நான்கு மாசி வீதிகள் அருகே ஓட்டுச்சாவடி மையங்களும் உள்ளன. இதனால் தேரோட்டத்தின் போது மக்கள் ஓட்டளிக்க செல்வதில் இடையூறு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.