பதிவு செய்த நாள்
13
மார்
2019
11:03
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி–பங்குனி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறியவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். விழாவையொட்டி தினமும் மாலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. வரும் 19–ம் தேதி கரகம், மதுக்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.
20–ம் தேதி காலை 9:30 மணியளவில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோயில் காவடி, பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 4:00 மணிக்கு மதுக்குடம், முளைப்பாரி பருப்பூரணியில் கரைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.இரவு காப்பு பெருக்குதல் நடக்கிறது. 21–ம் தேதி திருவீதி உலாவும், 22 –ம் தேதி சந்தன காப்பு அலங்காரமும் நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராமசாமி தலைமையில், செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர், கணக்கர் அழகுபாண்டி செய்திருந்தனர்.காரைக்குடி டி.எஸ்.பி.,அருண் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெருமையில் பொறுமை தேவை: காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் விழாவையொட்டி காரைக்குடி மட்டுமன்றி சுற்றியுள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த மக்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்களை ஒழுங்கு படுத்தவும் பல்வேறு ஆண்கள், பெண்கள் அடங்கிய சேவை குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அம்மனுக்கு செய்யும் சேவையாக பலர் இதை கருதுகின்றனர். ஆனால், ஒரு சிலர் இந்த சேவையை தங்களுக்கு வழங்கிய அதிகாரமாக நினைத்து பக்தர்களை மிரட்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர். கொடியேற்றத்தின்போது காப்பு கட்டவும், வழிபாடு செய்யவும் வந்த பக்தர்களிடம் அன்பாக பேசுவதை தவிர்த்து அதிகார தோரணையில் பேசி, விரட்டியதால் மக்கள் அதிருப்திக்கு உள்ளாகினர். எனவே, பக்தர்களிடம் அன்பாக நடக்க அறிவுரை வழங்க கோயில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.