திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கருட சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2019 02:03
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான இன்று (மார்.,16ல்)தேகளீசபெருமாள் கருட சேவை நடைபெறுகிறது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலை, நடு நாட்டு திருப்பதி என பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர். பிரசித்தி பெற்ற இத்தலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஐந்தாம் நாளான இன்று (மார்.,16ல்) காலை 8:00 மணிக்கு இந்திர விமானத்தில் தேகளீசபெருமாள் வீதியுலா, பகல் 11:00 மணிக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு, தேகளீசபெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 18ம் தேதி மாலை திருக்கல்யாண வைபவம், 20ஆம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ நிவாச ராமானுஜாசாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.