பதிவு செய்த நாள்
21
மார்
2019
03:03
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அருகே நடந்த, கோதண்டராம சுவாமி தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே பூதிமுட்லு கிராமத்தில், 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. இங்கு தேர்த்திருவிழா கடந்த, 14ல் துவங்கியது. நேற்று (மார்ச்., 20ல்) விழாவை முன்னிட்டு, கோதண்டராம சுவாமியை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
வேப்பனஹள்ளியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அன்னதானம், தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு வழங்கினர். நாளை பல்லக்கு தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், கோதண்டராம சுவாமியை அலங்கரித்து நகர் வலம் அழைத்துச் செல்கின்றனர். பின்னர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையில், போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.