பதிவு செய்த நாள்
24
மார்
2019
02:03
உளுந்துார்பேட்டை, திருவெண்ணெய் நல்லுார் அருகே, முருகன் கோவிலில் ஒன்பது எலுமிச்சம் பழங்கள், 1.55 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டை குன்றின் மீது பழமை வாய்ந்த ஸ்ரீரத்தின வேல் முருகன் கோவில் உள்ளது.
இடும்பன் பூஜைஇக்கோவில் கருவறையில் வேல் மட்டுமே இருக்கும். ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஒன்பது நாள் திருவிழா நடத்தப்பட்டு, 10ம் நாள் காவடி பூஜை நடைபெறும். 11ம் நாள் நள்ளிரவில், இடும்பன் பூஜையில் எலுமிச்சம் பழம் ஏலம் விடப்படும்.இந்த எலுமிச்சம் பழத்தை வாங்கி சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; குடும்பப் பிரச்னை தீரும் என்பது, மக்கள் நம்பிக்கை. இதனால், எலுமிச்சம் பழத்தை அதிக விலை கொடுத்து வாங்க, போட்டி ஏற்படும்.இந்த ஆண்டு, பங்குனி உத்திர திருவிழா, 11ம் நாளான நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, எலுமிச்சம் பழங்கள் வரிசையாக ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது.இந்த ஏலத்தில்,முதல் நாள் எலுமிச்சம் பழம், 41 ஆயிரம் ரூபாய்க்கு போனது.மொத்தமுள்ள, ஒன்பது பழங்களும், 1.55 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன.கருவாடு சாதம்கடந்தாண்டு, 1.02 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது.ஏலம் விடப்பட்ட பழங்களை, குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் வாங்கிச் சென்றனர். ஏலம் கேட்கும் உரிமை, உள்ளூர்காரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.இதனால், வெளியூர்காரர்கள் உள்ளூர்காரர்களை வைத்து, ஏலம் கேட்கின்றனர். ஏலம் எடுத்த தம்பதியருக்கு, எலுமிச்சம் பழத்துடன், ஒரு உருண்டை கருவாடு சாதம், பிரசாதமாக வழங்கப்பட்டது.