வால்பாறை:வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எஸ்டேட் மகாளியம்மன் திருக்கோவிலின் 53ம் ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக காலை 5.00 மணிக்கு கணபதி ஹோமமும், 6.00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. காலை 8.00 மணிக்கு எஸ்டேட் மேலாளர் சிபி திருக்கொடி ஏற்றினார்.வரும் ஒன்பதாம் தேதி இரவு 9.00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சியும், இரவு 12.00 மணிக்கு அம்மனுக்கு அலங்கார அரண்மனை பூஜையும், வரும் 10ம் தேதி காலை 8.00 மணிக்கு விநாயகர், முருகன், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பகல் 12.00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணமும் நடக்கின்றன. வரும் 11ம் தேதி காலை சிறுகுன்றா எல்.டி., மதுரைவீரன் சுவாமி கோவிலிலிருந்து முருக பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து, அலகு குத்தியும், தூக்குகாவடி எடுத்தும், பாதக்குரடு அணிந்து ஊர்வலமாக கோவிலை சென்றடைகின்றனர்.பின்னர் காலை 12.00 மணிக்கு கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.