பதிவு செய்த நாள்
27
மார்
2019
02:03
திருத்தணி:வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து, திருத்தணி முருகன் கோவிலில், நேற்று (மார்ச்., 26ல்) முதல் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.
ஒன்றரை மாதமாக, திருத்தணி நகரில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கோவில் நிர்வாகம் பக்தர்கள் நடப்பதற்கு வசதியாக மாடவீதியில் வெள்ளை வண்ணம் அடித்தும், தரைவிரிப்பான் விரிந்துள்ளனர்.வெயிலின் தாக்கத்தை தொடர்ந்து, கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கும் திட்டம் நேற்று, துவங்கப்பட்டது.
இத்திட்டத்தை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். இது குறித்து கோவில் தக்கார் ஜெய்சங்கர் கூறியதாவது:கோடை வெயிலை யொட்டி, ஆண்டுதோறும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நீர்மோர், சுக்குபானகம் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கி வருகிறோம்.தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், முன்கூட்டியே நீர்மோர் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தினமும், குறைந்தபட்சம், 2,000 பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.