பதிவு செய்த நாள்
28
மார்
2019
11:03
உடுமலை : உடுமலை, தாராபுரம் ரோடு ராஜகாளியம்மன் கோவிலில் நடந்த அம்மன் திருக்கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.உடுமலை, ராஜகாளியம்மன் கோவிலில், கடந்த 12ம் தேதி கணபதி ஹோமத்துடன் நோன்பு சாட்டப்பட்டது.
தொடர்ந்து, 19ம்தேதி கம்பம் போடுதல் மற்றும் 24ம்தேதி முனி விரட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தன.சுற்றுப்பகுதி குடியிருப்புகள் மற்றும் அருகிலுள்ள கிராம மக்களும் கம்பத்துக்கு தீர்த்தமெடுத்து வந்து வழிபட்டனர். கடந்த 25ம்தேதி, திருமூர்த்திமலையிலிருந்து, தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, மாரியம்மன் கோவிலில் வழிபட்டு, மாலையில் கோவிலை வந்தடைந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள், மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்து நேர்த்திக்கடன்களை நிறைவு செய்தனர். திருவிழாவின் நிறைவாக, நேற்று, காலை, 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.சுற்றுப்பகுதியிலிருந்து திரளானவர்கள் பங்கேற்றனர். திருக்கல்யாண வைபவத்தையொட்டி, பக்தர்களுக்கு மங்கல பொருட்கள் வழங்கப்பட்டன.