பதிவு செய்த நாள்
28
மார்
2019
11:03
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அடுத்த, கோதவாடி குளத்தை சுற்றியுள்ள, 11 கோவில்களில் மழை வேண்டி, சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக வழிபாடு நேற்று நடந்தது.
கிணத்துக்கடவு அடுத்த குருநல்லிபாளையத்துக்கு உட்பட்டது கோதவாடிகுளம். கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் குளத்துக்கு பெரிய அளவில் நீர்வரத்து இல்லை.இதையடுத்து, விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பி.ஏ.பி., கால்வாயில் இருந்து, குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தில், சில ஏக்கரில் தண்ணீர் தேங்கியது.
ஆனால், வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில், தற்போது கோடை வெயிலும் கொளுத்துவதால், குளத்தை ஒட்டிய பாசன கிணறுகளில் கூட நீரில்லை.சுட்டெரிக்கும் வெயிலால் தென்னை உள்ளிட்ட அனைத்து பயிர்களும், வாடி, கருகியுள்ளன.இந்நிலையில், மழை வேண்டி குளத்தை சுற்றியுள்ள, குண்டத்து காளியம்மன், விநாயகர், பழநி ஆண்டவர், கன்னிமார் கருப்பசாமி, தன்னாசி ஆண்டவர், முனியப்பசுவாமி, ராமர், பேச்சியம்மன், வளையல்காரஅம்மன், வஞ்சியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடந்தது.சிறப்பு பூஜையில், கோதவாடி, குருநல்லிபாளையம், வடசித்துார், கொண்டம்பட்டி விவசாயிகளும், பொதுமக்களும் பங்கேற்றனர்.
மழை பெய்ய வேண்டும்; கோதவாடி குளம் நிறைந்து பாசனம் பெருக வேண்டும்; கால்நடைகளின் தீவன பஞ்சம் தீர வேண்டும் என, விவசாயிகள் வேண்டுதல் வைத்தனர்.விவசாயிகள் கூறுகையில், ’கோதவாடி குளம் நிறைந்தால், சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய நிலம் மற்றும் ஊராட்சி நீர்ஆதாரங்களில் நீர்மட்டம் உயரும். இந்தாண்டு, பி.ஏ.பி., தண்ணீர் கோதவாடிக்கு வழங்கியதால், மூன்று மாதங்கள் நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டது.கடும் வெயில் காரணமாக, குளத்தில் நீர் வறண்டு வருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, நீர் ஆதாரங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இந்நிலையில், மழை பெய்ய வேண்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது,’ என்றனர்.