பதிவு செய்த நாள்
01
ஏப்
2019
02:04
திருவண்ணாமலை: வரும் ஏப்., 18 ல், இரவு, 7:11 மணி முதல், ஏப்.,19ல், காலை, 5:20 மணி வரை பவுர்ணமி திதி உள்ளதால், இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். அவ்வாறு செல்லும் பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்க கட்டுப்பாடுகளை கலெக்டர் கந்தசாமி விதித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏப்.,18ல், சித்ரா பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவர். நகரம் மற்றும் கிரிவலப்பாதையை சுத்தமாக பராமரிப்பது அனைவரின் கடமை. எனவே, அன்னதானம் வழங்க விரும்புவோர், சில கட்டுப் பாடுகளை கடைபிடிக்க வேண்டும். அன்னதானம் செய்ய உள்ளோர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஏப்.,2 முதல், 12 வரை விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும். கிரிவலப்பாதையில் எக்காரணம் கொண்டும் சமைக்கக் கூடாது.
உணவுபொருட்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு சிலிண்டர்கள், விறகு, மண்ணெண்ணெய் அடுப்புகள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.