பதிவு செய்த நாள்
03
ஏப்
2019
02:04
சங்ககிரி: சங்ககிரி, சந்தைப்பேட்டை செல்லாண்டியம்மன், புத்து மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம், 19ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 15ம் நாளான, நேற்று (ஏப்., 2ல்), ஏராளமான பக்தர்கள், அலகு குத்தி, அக்னிசட்டி ஏந்தி, பால்குடம், பூங்கரகம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக வந்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை, சேத்துமுட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் நடக்கிறது.
பூங்கரகம்: மகுடஞ்சாவடி, தப்பக்குட்டை, ஐயனூர் பெரிய மாரியம்மன் கோவில்
திருவிழாவையொட்டி, கடந்த, 19ல் பூச்சாட்டுதலுடன் கம்பம் நடப்பட்டது. நேற்று (ஏப்., 2ல்), திரளான பக்தர்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து, தாடிக்காரனூரிலிருந்து, 30க்கும் மேற்பட்ட பக்தர்கள், அலகுகுத்தி ஊர்வலமாக, கோவில் வளாகத்தை அடைந்தனர். அம்மன்கோவில் பகுதியிலிருந்து, பூங்கரகம் மற்றும் அக்னி கரகத்துடன், மேளம் முழங்க, ஊர்வலமாக வந்தனர். இன்று (ஏப்., 3ல்), மஞ்சள் நீராட்டம், சுவாமி ஊர்வலத்துடன் திருவிழா நிறைவடையும்.
எருதாட்டம்: இளம்பிள்ளை, கே.கே.நகர் அருகே, வெள்ளை பிள்ளையார் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று (ஏப்., 2ல்), எருதாட்டம் நடந்தது.
பிள்ளையார் கோவில் அருகேவுள்ள மைதானத்தில், 40 காளைகளை விட்டு, இளைஞர்கள், பொம்மையை காட்டி கோபமூட்டினர். அப்போது, துள்ளிக்குதித்த காளைகளை பார்த்து, மக்கள் ஆரவாரம் செய்தனர். மேலும், சேலம், குமாரசாமிப்பட்டி எல்லைப் பிடாரியம்மன் கோவில் திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.