பதிவு செய்த நாள்
05
ஏப்
2019
12:04
வீரபாண்டி: ஓம்சக்தி, பராசக்தி கோஷம் முழங்க, தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இளம்பிள்ளை, ஏரிக்கரை, மாரியம்மன், காளியம்மன் கோவில்களின் பங்குனி திருவிழா, கடந்த மார்ச், 29ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை, தேரோட்டம் நடந்தது. இதற்காக, அம்மனை, சர்வ அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், ஓம்சக்தி, பராசக்தி கோஷம் முழங்க, தேரை வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச்சென்று, மீண்டும் கோவிலை அடைந்தனர். இதையொட்டி, நீர்மோர், பழம், சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இரவு, வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, மஞ்சள் நீராட்டு வைபவம், நாளை சத்தாபரணத்துடன் விழா நிறைவடைகிறது.
தீ மிதித்து பரவசம்: இடைப்பாடி அருகே, காவேரிப்பட்டி, ஓம்காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா, கடந்த மாதம், 29ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று, தீ மிதித்தல் விழா நடந்தது. கரகக்காரர் குணசேகரன், தீ மிதித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.