பதிவு செய்த நாள்
05
ஏப்
2019
02:04
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா இன்று (ஏப்., 5ல்) நடக்கிறது.
தாயமங்கலம் முத்துமாரியம்மனை, திருமண வரம்வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் ஏராளமான பக்தர்கள் வணங்கி செல்வார்கள். வேண்டிய வரம் கிடைத்ததும், தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். அம்மைநோயால் பாதிக்கப்பட்டவர்கள், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனை வணங்கி தீர்த்தம் வாங்கி சென்றால் நோய் குணமாகும் என்பதும் நம்பிக்கை.
இந்த கோயிலில் பங்குனித் திருவிழா, கடந்த மாதம் 29ஆம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில், அம்மன் தினமும் சிம்மம், குதிரை, காம தேனு, அன்ன பூத வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
விழாவிற்கு, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உட்பட அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். பொங்கல் விழாவையொட்டி, தாயமங்கலத்திற்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரைøயாகவும் வருகின்றனர்.
பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டும், மாவிளக்கு, அக்னிசட்டி, கரும்புத்தொட்டில் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பொங்கல் தினமான இன்று (ஏப்., 5ல்) தாயமங்கலம், இளையான்குடி மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள், கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.
நாளை (ஏப்., 6ல்) இரவு, மின் தீப ஒளி அலங்காரத்துடன் தேரோட்டம் நடைபெறும். நாளை மறுநாள் (ஏப்., 7ல்), பால் குடம், ஊஞ்சல் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு பூப்பல்லக்கு நிகழ்ச் சியும் நடைபெறும். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர், மு.வெங்கடேசன் செட்டியார் செய்து வருகிறார். விழாவையொட்டி, அனைத்து பகுதிகளில் இருந்தும் தாயமங்கலத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவிற்காக மானாமதுரையில் பக்தர்கள் தீச்சட்டிகள் எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா கடந்த மாதம் மார்ச் 29ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். முக்கிய விழாவான பொங்கல் விழா இன்று (ஏப்., 5ல்) நடைபெற உள்ளது. இதற்காக மானாமதுரை பகுதியில் உள்ள பக்தர்கள் கொடியேற்றத்தன்று காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பொங்கல்
திருவிழாவிற்கு முன்னதாக தினந்தோறும் தீச்சட்டிகளை எடுத்துக்கொண்டு மானாமதுரை பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று அம்மனுக்கு காணிக்கை பெற்றுக்கொண்டு பொங்கல் அன்று தாயமங்கலத்திற்கு சென்று தீச்சட்டிகளை செலுத்தி விட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி, ஆடு, கோழிகளை பலியிட்டு விரதத்தை முடித்து ஊர் திரும்புவர்.