விநாயகர் கோயில் இடிப்பு பக்தர்கள் குண்டுகட்டாக அகற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2026 11:01
திருநெல்வேலி: திருநெல்வேலியில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் விநாயகர் கோவிலை இடித்தனர்.
திருநெல்வேலி, தியாகராஜ நகரில் சிவந்திப்பட்டி சாலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு, அரச மரத்தை ஒட்டி பிள்ளையார் கோவில் கட்டப்பட்டு வழிபாட்டில் உள்ளது. அந்த கோவில் அருகே கவிதா ஆறுமுகம் என்பவர் வணிக வளாகம் ஒன்றை புதிதாக கட்டியுள்ளார். வணிக வளாகத்தின் வாசலில் கோவில் இருப்பதால் இடையூறாக இருப்பதாகவும் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோயிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே மூன்று முறை நோட்டீஸ் விடப்பட்ட நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறையினர் கோயிலை இடிக்க வந்தனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த கோயிலை இடிப்பதற்கு பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் தான் காரணம் எனக்கூறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. எனவே இதில் பா.ஜ., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் ஆர்வம் காட்டவில்லை. கோயில் இடிக்கக் கூடாது என வலியுறுத்திய பக்தர்களை போலீசார் குண்டு கட்டாக வெளியே அப்புறப்படுத்தினர். கோவில் இடிப்பதற்கு முன்பாக விக்கிரகங்கள், முக்கிய சிலைகளை எடுத்துக் கொள்ள ஒரு நாள் அவகாசம் கேட்டனர். இதையடுத்து நேற்று கோவில் இடிப்பு நிறுத்தப்பட்டது. இன்று இடிப்பு தொடர வாய்ப்புள்ளது. சர்ச்சை கோயிலை இடிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தரப்பினரும் பா.ஜ., வில் முக்கிய பொறுப்பில் உள்ளார்கள். அவர்கள் கட்டிய கட்டடமே மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறவில்லை என்றும் அந்த கட்டடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் விட்டும் நடவடிக்கை இல்லை. அதை செய்யாமல் தற்போது கோயிலை இடிக்க முன்வருகிறார்கள் என பக்தர்கள் குறை கூறினர்.