பதிவு செய்த நாள்
06
ஏப்
2019
02:04
கடலூர்: கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமியை யொட்டி, வரும் 11ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கிறது.வரும் 11ம் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. பின் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாதசுவாமி கொடி மரம் முன் எழுந்தருளி கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடியேற்றப்படுகிறது.
தொடர்ந்து, சூரிய பிரபை வாகனம், வெள்ளி சிம்ம வாகனம், யாளி வாகனம், அனுமந்த வாகனம், தங்க விமானத்தில் வேணுகோபாலன் அலங்காரம், சேஷ வாகன வீதியுலா நடக்கிறது. வரும் 15ம் தேதி தங்க பல்லக்கில் நாச்சியார் அலங்காரம் மற்றும் 18ம் தேதி பேட்டை உற்சவம், வெள்ளி குதிரை வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.வரும் 19ம் தேதி சித்ரா பவுர்ணமியை யொட்டி பிரம்மோற்சவ தேரோட்டம் நடக்கிறது. அன்று, அதிகாலை தேவநாதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அதிகாலை 4:15 மணி முதல் 5:50 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதை தொடர்ந்து தீர்த்தவாரியும், மதுரகவி ஆழ்வார் உற்சவ சாற்று முறை நடக்கிறது. பின், 30ம் தேதி காலை மட்டையடி உற்சவமும், தங்க பல்லக்கில் சுவாமி வீதியுலா மற்றும் இரவு தெப்பல் உற்சவம் நடக்கிறது. முன்னதாக, வரும் 10ம் தேதி நித்திய உற்சவர் தேவநாதசுவாமி பல்லக்கில் எழுந்தருளி புற்று மண் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.