பதிவு செய்த நாள்
07
ஏப்
2019
01:04
மயிலாடுதுறை: திருமெய்ஞானம், அஸ்வினி தீர்த்தத்த்தில் மார்கண்டேயர் தீர்த்தவாரி, வருடத்தில் ஒரு நாள் மட்டுமே பக்தர்கள் நீராட அனுமதி என்பதால் தொலை தூரத்தில் இருந்து வந்த திரளான பக்தர்கள் வந்து புனித நீராடினர்.
நாகை மாவட்டம் திருக்கடையூரில் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பக்த மார்க்கண்டேயருக்காக எமனை இறைவன் சம்ஹாரம் செய்த பின்பு உயிர்ப்பித்த தலம் என்று புராணம் கூறுகின்றது. திருக்கடையூரில் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக மார்க்கண்டேயர், வேண்டுதலுக்கு ஏற்ப திருக்கடையூரை அடுத்த திரு மெய்ஞானம் என்ற இடத்தில் கங்கை நீர் கிணற்றிலிருந்து தோன்றியது என்றும், இதற்கு காசி கூபத்தீர்த்தம் என்றும் பெயர்.
பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திர தினத்தில் இந்த கிணறு தோன்றியதால், ஆண்டு தோறும் பங்குனி மாதம் கிணற்றில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன் படி தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியை முன்னிட்டு, பக்த மார்க்கண்டே யர் காசி கூபத்தீர்த்திற்கு பல்லக்கிற்கு எழுந்தருளினார். அங்கு ராமலிங்கம் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி அஸ்திரதேவருக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்த பிறகு பக்த மார்க்கண்டேயர் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கே ற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த கிணற்று நீரில் தீர்த்தவாரி அன்று மட்டுமே பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவர். தினமும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சுவாமிக்கு இந்த நீரை மாட்டு வண்டியில் எடுத்துச்சென்று 6 காலத்திற்கு அபிஷேகம் செய்யும் பழக்கம் பலநூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.