பதிவு செய்த நாள்
08
ஏப்
2019
12:04
மதுரை: சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் சித்திரை திருவிழா திருக்கல்யாண மாப்பிள்ளை அழைப்பு, விருந்துக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் 19வது ஆண்டு மாப்பிள்ளை அழைப்பு, திருக்கல்யாண விருந்து நடக்கிறது.
ஏப்.,16 மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை மாப்பிள்ளை அழைப்பு விருந்து, ஏப்.,17 திருக்கல்யாண விருந்து காலை 6:00 முதல் பகல் 2:00 மணி வரை நடக்கும்.
இச்சேவையில் பங்கு பெறும் பக்தர்கள் ஏப்.,13,14ல் பள்ளியில் பொருட்களை கொடுத்து ரசீது பெறலாம். பரவை, மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டுகள் சார்பில் காய்கறிகள், வணிகர்கள், வியாபாரிகள் சார்பில் மளிகை பொருட்கள், இன்டேன், எச்.பி., பாரத் காஸ் நிறுவனத்தினர் காஸ் சிலிண்டர்கள் வழங்குகின்றனர்.
விருந்துக்கான முகூர்த்தக்கால் நடும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று (ஏப்., 7ல்) செயலர் பார்த்தசாரதி தலைமையில் நடந்தது. பொருளாளர் கனகசுந்தரம், தலைமை ஆசிரியர் கோபால கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். டிரஸ்ட் தலைவர் விவேகானந்தன், பொருளாளர் தங்கம் தண்டீஸ்வரன், பிராமணர் சங்க மாநில துணை பொதுச் செயலர் இல.அமுதன், ஓய்வு டி.எஸ்.பி.,க்கள் மாணிக்கம், கணேசன், மத்திய மஞ்சப்புத்தூர் மகாசபை நிர்வாகி வெங்கடேசன், உழவாரப்பணி நிர்வாகி முருகதாஸ் பங்கேற்றனர்.