மேட்டுப்பாளையம் சிறுமுகை மாரியம்மனுக்கு மழை வேண்டி அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2019 02:04
மேட்டுப்பாளையம்:மழை வேண்டி சிறுமுகை அருகே பாதயாத்திரையாக புனித நீர் எடுத்துச் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய பகுதிகளில் பருவமழை பெய்யாததால், கடுமையான வறட்சி நிலவுகிறது. போர்வெல்களிலும், விவசாய கிணறுகளிலும் நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளது. இதனால் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடுமையான வெப்பத்தால் மக்கள் உஷ்ணம் தாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அடுத்தடுத்து இரண்டு மழை பெய்தால், பூமி குளிர்ச்சி அடைவதோடு, நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சிறுமுகையை அடுத்த இலுப்பநத்தம் கிராம மக்கள் ஆலாங்கொம்பு தண்ணீர் தடம் பகுதிக்கு வந்தனர்.அங்கு பவானி ஆற்றிலிருந்து வெள்ளிக் குதிரையில் அம்மன் அழைப்பும், 51 குடங்களில் புனித நீரை எடுத்து, 9 கி.மீ., தூரம் பாதயாத்திரையாக இலுப்பநத்தம் சென்றனர். அங்கு மழை வேண்டி மாரியம்மனுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்தனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.