திருமங்கலம்:மதுரை மாவட்டம் கப்பலுார் முத்தாலம்மன் கோயிலில் நடந்த புதைகுழி திருவிழாவில் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோயிலில் நேற்று மாலை 5:30 மணிக்கு புதைகுழி திருவிழா தொடங்கியது.
கப்பலுார் மற்றும் சுற்றுக்கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர். விநோதமான இந்த விழாவிற்காக தெருக்களில் தண்ணீர் ஊற்றி குளிரவைத்து சுத்தம் செய்தனர். பின்னர் தெருமுழுவதும் வேப்பிலை பரப்பினர். நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் அதன் மீது படுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு பூஜாரி திருநீறு பூசுவார். பின்னர் அவர்கள் மீது மண் துாவப்படும். (குழிதோண்டி படுக்க வைத்து சாமி தாண்டிச் செல்வது வழக்கம். காலமாற்றத்திற்கு ஏற்ப சில ஆண்டுகளாக குழிதோண்டி படுக்க வைப்பது தவிர்க்கப்படுகிறது).கப்பலுார் முழுக்க ஏழுக்கும் மேற்பட்ட தெருக்களில் மஞ்சள் நீராடி, மாலை அணிந்து, திருநீறு, சந்தனம், குங்குமம் பூசி வேப்பிலை மீது படுத்துக்கொண்டனர். முத்தாலம்மன் சிலை துாக்கி வந்த பூஜாரி படுத்திருந்த அத்தனை பேரையும் தாண்டி, தாண்டி சென்றார். அவர் தாண்டிச் சென்றதும் நேர்த்திக்கடன் பூர்த்தியடைந்ததாக கருதி, அனைவரும் எழுந்து சென்றனர்.