திருப்பூர்:சூசையாபுரம் முத்துமாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழாவில் நேற்று அக்னிகரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.திருப்பூர், சூசையாபுரம் மேற்கு காலனியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் எட்டாமாண்டு பூச்சாட்டு பொங்கல் விழா கடந்த, 2ம் தேதி, அம்மனுக்கு பூச்சாட்டுடன் துவங்கியது. 8ம் தேதி, பூங்கரம் தீர்த்தம் மற்றும் படைக்கலத்துடன் அம்மன் பவனி நடந்தது.
விழாவில் நேற்று முன்தினம் (ஏப்., 10ல்) உருவு எடுத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து அம்மை அழைத்தல், முளைப்பாலிகை எடுத்தல், அலகு குத்துதல் ஆகியன நடந்தன. நேற்று (ஏப்., 11ல்) மாலை நொய்யல் ஆற்றங்கரையிலிருந்து அக்னிகரகத்துடன் அம்மன் திருவீதியுலா நடந்தது.
வாண வேடிக்கை மற்றும் வாத்தியத்துடன் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று (ஏப்., 12ல்) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது.