களக்காடு :திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் பங்குனி திருவிழா வரும் 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 17ம் தேதி தேரோட்ட திருவிழா நடக்கிறது. திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் 108 வைணவ ஸ்தலங்களில் மிகவும் புகழ் பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்ட திருவிழா மிக சிறப்பாக நடப்பது வழக்கம். இவ்வாண்டு பங்குனி தேரோட்ட திருவிழா வரும் 8ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஒவ்வொரு நாளும் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் வீதிஉலா செல்கிறார். வரும் 11ம் தேதி 4ம் திருநாளன்று ஆதிஷேச வாகனத்தில் சுவாமி வீதிஉலா செல்கிறார். 5ம் திருநாளான 12ம் தேதி இரவு 5 நம்பிகளும் கருட வாகனத்தில் வீதிஉலா செல்கின்றனர். மறுநாள் அதிகாலையில் மேலரத வீதியில் 5 நம்பிகளும் மகரிஷிகளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 5 நம்பிகளையும் தரிசனம் செய்கின்றனர். 10ம் திருநாளான வரும் 17ம் தேதி தேரோட்ட திருவிழா நடக்கிறது. தேரோட்டத்தை ஜீயர் சுவாமிகள் வடம்பிடித்து துவக்கி வைக்கிறார். திருவிழாவையொட்டி தினமும் இன்னிசை கச்சேரி, சமய சொற்பொழிவு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.