பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில்மாசி மக உற்சவ விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2012 11:03
விளாத்திகுளம் : விளாத்திகுளம் அருகேயுள்ள கோவில் குமரெட்டையாபுரம் பாலசுப்பிரமணியன் கோயிலில் மாசிமக உற்சவ விழா நடந்து வருகிறது. நாளை (6ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் அடுத்துள்ள கோவில் குமரெட்டையாபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. அறுபடை வீடுறை அழகன், ஆறயர் செல்வன் ஆதிசிவன் மைந்தன், அழகுமிகு பாலன், அமர்ந்து அருளாட்சி செய்து வரும் திருத்தலங்களுள் தென்தமிழ் நாட்டின் கடைசிப் பகுதியில் குமரன் கோயில் கொண்டதாலேயே கோவில் குமரெட்டையாபுரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் திருச்செந்தூரில் நடக்கும் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் கொண்டாடப்படுகிறது. மாசிமக உற்சவ விழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் மாசிமக உற்சவ திருவிழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜைகளும், சுவாமி வீதி உலா நடந்தது. 7ம் திருநாளான நேற்று இரவு சண்முகர் வள்ளி தெய்வானை சிவப்புசாத்தியும், வெள்ளை சாத்தியும் எழுந்தருளல் நடந்தது. 8ம் திருநாளான 5ம் தேதி இன்று காலை 5 மணிக்கு மேல் சண்முகர் வள்ளி தெய்வானை பச்சைசாத்தி எழுந்தருளால், இரவு 8 மணிக்கு மேல் பாலமுருகன் வேட்டையாடி மண்டகப்படிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளல், பின்னர் இரவு 12 மணிக்கு மேல் முருகன் குதிரை வாகனத்தில் எழுந்தருளல் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மாலை 4 மணிக்கு மேல் நடக்கிறது. இரவு 10 மணிக்கு பேராசிரியர் ஞானசம்பந்தம் நடுவராக பங்கேற்றும் பட்டிமன்றம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை விளாத்திகுளம் வசந்தம் ரியல் எஸ்டேட் ஜெயக்குமார் வழங்குகிறார். மேலும் திருவிழாவிற்கு இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக நகைச்சுவை பட்டிமன்றம் மற்றும் வள்ளி திருமணம் நாடகம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் கோவில் குமரெட்டையாபுரம் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.