பதிவு செய்த நாள்
06
மார்
2012
11:03
மோகனூர்: ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோவிலில், மாசி மாத தூக்குத் தேர்த்திருவிழா, நாளை (மார்ச் 7) கோலாகலமாக நடக்கிறது. மோகனூர் அடுத்த ஒருவந்தூரில், பிரசித்தி பெற்ற பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த 29ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, மார்ச் 1ம் தேதி முதல் நேற்று வரை தினமும் இரவு 7 மணிக்கு ஸ்வாமி சப்பாரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (மார்ச் 6) காலை 9 மணிக்கு, முகூர்த்தம் திருத்தேர் செய்து ஜோடனை நடக்கிறது. நாளை (மார்ச் 7) காலை 10 மணிக்கு திருத்தேர் ரத உற்சவம், உள்ளூர் பூஜை, மாலை 5 மணிக்கு வடுகப்பட்டியில் எல்லை உடைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 8ம் தேதி, காலை 10 மணிக்கு கிராம பூஜை நடக்கிறது. 9ம் தேதி காலை 9 மணிக்கு வடுகப்பட்டி மற்றும் ஆயக்கல்புதூரில் பூஜை நடக்கிறது. 10ம் தேதி காலை 10 மணிக்கு திருத்தேர் குடிபுகுதல் நிகழ்ச்சியும், அன்று இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும் நடக்கிறது. மார்ச் 13ம் தேதி காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, எடுத்துக்கட்டு சாவடியில் அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.