சுசீந்திரம் :தேரூர் ஆலடிவீடு பூதநாதன்பிள்ளையின் மகள் அறம்வளர்த்த நாயகி மற்றும் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமிக்கு இன்று (6ம் தேதி) திருக்கல்யாணம் நடக்கிறது. தேரூர் ஆலடி வீட்டை சேர்ந்த பூதநாதன்பிள்ளை, வள்ளியறை நாச்சியார் ஆகியோரின் மகள் அறம் வளர்த்த நாயகி. சிறு வயது முதலே அறம்வளர்த்த நாயகி தாணுமாலயன் சுவாமி மீது தீராத காதல் கொண்டார். இதனால் அவர் சுசீந்திரத்திற்கு வந்து தாணுமாலயரை தினமும் அன்புடன் வழிபட்டு வந்தார். இறுதியில் தனது 17வது வயதில் அதாவது ஆங்கில ஆண்டு 1444 மார்ச் 2ம் தேதி (தமிழ் ஆண்டு 619ம் ஆண்டு மாசி மாதம் 17ம் தேதி) திங்கள்கிழமை சுசீந்திரம் தாணுமாலய சுவாமியிடம் அவர் ஐக்கியமானார். இறைவன் மீது தாளாத அன்பு கொண்டு இறுதியில் சுவாமியிடமே ஐக்கியமானதால், அவர் ஐக்கியமான நாளை திருக்கல்யாண நாளாக இன்றுவரை மன்னர்களும் தொடர்ந்து கோயில் நிர்வாகமும் நடத்தி வருகிறது. அறம்வளர்த்த அம்மனுக்கு கோயில் வடக்கு பிரகாரத்தில் தனி கோயிலும் கட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த கோயிலுக்கான நித்திய பூஜைகளுக்கும் திருக்கல்யாண செலவுக்குமாக சேர்த்து அறம்வளர்த்த நாயகி அம்மனின் உறவினர்களான பூதநாதன் ராமநாதபிள்ளை, வீரிய பெருமாள் ஐயம்பெருமாள் பிள்ளை, முத்துவைரவன் சங்கரதாணுபிள்ளை ஆகியோர் அணைக்கரை வயல், காடங்குளம் பரவு, தேர்குளம் புரவு பகுதிகளை சேர்ந்த வயல்களை கோயிலுக்கு எழுதி வைத்துள்ளனர். இந்த உயில் பத்திரமாக கால காலமாக பாதுகாக்கப்பட்டு, இறுதியில் மலையாள மொழியில் பத்திரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் நகல்கள் கோயிலின் வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மாவிடம் இன்றும் உள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை போல இறைவனில் ஐக்கியமான அறம் வளர்த்த நாயகி அம்மனின் நினைவாக ஆண்டு தோறும் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா நடத்தப்பட்டு வருகிறது. சுசீந்திரம் கோயிலில் இந்த ஆண்டின் மாசி திருக்கல்யாண விழா கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மன் அன்னம், சிங்கம் வாகனத்தில் பவனி வருதல் நடந்தது. இன்று மாலை 7 மணிக்கு கோயில் அலங்கார மண்டபத்தில் நடக்கும் திருக்கல்யாண விழாவில் விஷ்ணு சுவாமி முன்னிலையில் தாணுமாலய பெருமாள், அறம்வளர்த்த நாயகி அம்மனின் கழுத்தில் திருக்கல்யாண நாண் பூட்டுகிறார். விழா நிறைவில் பக்தர்கள் சங்கம் சார்பில் பெண்களுக்கு திருமாங்கல்ய பை மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். நாளை மாலை தேரோட்டமும் தொடர்ந்து ஆறாட்டும் நடக்கிறது.