தென்காசி கோயிலில் முறையான சப்பர வீதி உலா வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2012 11:03
தென்காசி :தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் முறையான சப்பர வீதி உலா வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் மாசி மகப் பெருவிழா நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை, இரவு சிறப்பு பூஜை வழிபாடும், இரவு சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதலும் நடந்தது. விழாவின் எட்டாம் நாளான நேற்று பச்சை சாத்தி நடராஜர் சப்பரமும், சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலாவும் நடந்தது. சப்பர வீதி உலா நடக்கும் போது ரதவீதிகளில் ஆங்காங்கே சப்பரங்கள் நின்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் நேற்று வடக்கு ரதவீதியில் சப்பரங்கள் நிற்காமல் சென்று விட்டது. இதனால் தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் முறையாக சப்பர வீதி உலா நடக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவனடியார்கள், அப்பர் உழவாரப்பணி மற்றும் பிரதோஷ வழிபாட்டு குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.