விழுப்புரம் : கைலாசநாதர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம்நாளை நடக்கிறது. விழுப்புரம் நகரில், பழமைவாய்ந்த, பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா, 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலையில் பல்லக்கு உற்சவம், மாலையில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று காலை, பல்லக்கு உற்சவத்தை தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவில், யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. பிரம்மோற்சவ விழாவில், நாளை மாலை, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் வீதியுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள்(18ம் தேதி) காலை 5:30 மணிக்கு, தேர்த் திருவிழாவும், 63 நாயன்மார்கள் உற்சவமும் நடக்கிறது.பிரதோஷ பேரவை சார்பில், தினமும் மாலையில், தேவார சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.