பதிவு செய்த நாள்
16
ஏப்
2019
02:04
மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி திருக்கல்யாணம் நாளை (ஏப்.,17) காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் நடக்கிறது.
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை பெருவிழா ஏப்.,8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
மீனாட்சி பட்டாபிஷேகம் நேற்று (ஏப்., 15ல்) நடந்தது. மீனாட்சி திக்கு விஜயம் இன்று (ஏப்.,16) நடக்கிறது.
முக்கிய நிகழ்வான மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 17ல்)நடக்கிறது. இதற்காக கோயிலுக்குள் மேற்கு - வடக்கு ஆடி வீதி சந்திப்பில் திருக்கல்யாண மேடையை
10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பூக்களால் அலங்கரிக்கும் பணி இன்று (ஏப்., 16ல்) துவங்குகிறது.
வெட்டிவேர், அன்னாசிப் பழங்களின் தோரணங்களால் அழகுப்படுத்தப்பட உள்ளது. மதுரை, ஊட்டி, கோவை, பெங்களூருவில் இருந்து பூக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மண மேடை பகுதிகளில் 200 டன் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.
பிரதான நுழைவு வாயில்திருக்கல்யாண கட்டண தரிசனம் (200 ரூபாய், 500 ரூபாய்) செய்வோர் மற்றும் உபயதாரர்கள் 6,400 பேர் வடக்கு கோபுரம் வழியாக நாளை காலை 6:30 மணிக்கு அனுமதிக்கப்படுவர். நிரந்தர உபயதாரர்கள், வி.ஐ.பி.,க்கள் மேற்கு கோபுரம் வழி அனுமதிக்கப்படுவர். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கட்டணமில்லா தரிசனம் செய்யும் 3,500 பேர் தெற்கு கோபுரம் வழி அனுமதிக்கப்படுவர்.
திருக்கல்யாணத்தை காண முக்கிய இடங்களில் மெகா டிவி வைக்கப்படும். சித்திரை வீதிகளில் மேற்கூரை வேயப்பட்டு வருகிறது. மேற்கு கோபுரம் அருகே மீனாட்சி அம்மன் கோயில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. மண மேடை பின்புறம் 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளவு கொண்ட வாட்டர் பலூன் வைக்கப்படும்.
மொய் காணிக்கை மையம் திருக்கல்யாண மொய் காணிக்கையாக 50 ரூபாய், 100 ரூபாய் செலுத்த வடக்கு, மேற்கு, தெற்கு கோபுரம் நுழைவு பகுதிகள் மற்றும் உள் பகுதிகள், 16 கால் மண்டபம், வன்னி விநாயகர் கோயில், அம்மன் மற்றும் சுவாமி சன்னதி நுழைவு பகுதிகள், பிர்லா விஷ்ரம் எதிரே என 11 இடங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்படும். குடிநீர், நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கோயில் சார்பில் வெளியிடங்களில் மாப்பிள்ளை அழைப்பு மற்றும் திருக்கல்யாண விருந்து நடத்த தனிநபர், டிரஸ்ட்டுகளுக்கு அனுமதி வழங்கவில்லை.மீனாட்சி அம்மன் கோயில் விருந்து, மாப்பிள்ளை அழைப்பு எனக்கூறி பணம், பொருள், நன்கொடை பெற்றால் அது சட்ட விரோதம். தனியார் டிரஸ்ட் நடத்தும் விருந்துக்கும், கோயிலுக்கும் சம்பந்தம் இல்லை, என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.