பதிவு செய்த நாள்
16
ஏப்
2019
02:04
மஞ்சூர்:அன்னமலை முருகன் கோவிலில் காவடி பெருவிழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது.மஞ்சூர், அன்னமலை முருகன் கோவிலில், ஆண்டு தோறும் காவடி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 30ம் ஆண்டு காவடி பெருவிழாவையொட்டி கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொலிவுப்படுத்தப்பட்டது.
பக்தர்கள் காவடி ஊர்வலத்தில் பங்கேற்க, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான காவடிகள் கோவிலில் தயார்படுத்தப்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து, 8:00 மணிக்கு முருகபெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது.பின், பக்தர்கள் புடைசூழ காவடி ஊர்வலம் அன்னமலை கோவிலிலிருந்து புறப்பட்டது. பால் காவடி, பன்னீர் காவடி, சந்தன காவடி என, பல்வேறு வகையான காவடிகளை ஏந்தி, ஓணிக்கண்டி, கீழ்குந்தா, கொட்டரக்கண்டி, மஞ்சூர், குந்தா கேம்ப், மட்டகண்டி வழியாக மதியம், 3:00 மணிக்கு காவடி ஊர்வலம் கோவில் வந்தடைந்தது.
வழிநெடுகிலும் முருக பெருமானுக்கு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து, ஆடல், பாடலுடன் வந்தனர். காவடி எடுத்து வந்த பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து ஏராளமான முருக பக்தர்கள் பங்கேற்கின்றனர்.ஊட்டி, குன்னூரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி செய்து வருகிறார்.