பதிவு செய்த நாள்
17
ஏப்
2019
10:04
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை பெருவிழா ஏப்.,8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி திருக்கல்யாணம் இன்று (ஏப்., 17ல்) காலை கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சொக்கநாதருடன், மீனாட்சி அம்மன் சர்வ அலங்காரத்தில் ஆடி வீதி, சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடையில் சொக்கநாதர் எழுந்தருளினார். பின்னர் பிரியாவிடை அம்மனுடன், சர்வ அலங்காரத்தில் மணக்கோலத்தில் மீனாட்சி அம்மன் மணமேடையில் எழுந்தருளினார்.
பின்னர் வேத மந்திரங்கள் ஒலிக்க மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்த போது சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றி அம்மனை வழிபட்டனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் கலந்து கொண்டார். திருக்கல்யாணம் காலையில் முடிந்த நிலையில், சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் விருந்து நடைபெற்றது.