பதிவு செய்த நாள்
20
ஏப்
2019
01:04
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் சித்ரா பவுர்ணமி தேரோட்டத்தில் பக்தர்கள் பலர் பங்கேற்று தேர்வடம் பிடித்தனர்.திருப்பதியின் ஏற்றம் கொண்டது, கள்ளக்குறிச்சியில் உள்ள புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில். சித்திரை தேர்திருவிழா ஏப்., 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் வரை காலை, இரவு நேரங்களில் அலங்கார வாகனங்களில் பெருமாள் தாயார் வீதியுலா உற்சவம் நடந்தது.கடந்த 17ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடந்தது. தேர் திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம் ஆகியவற்றிக்கு பின் ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்சவ மூர்த்திகளை வைத்து, பவனியாக வந்தபின் திருத்தேரில் எழுந்தருள செய்து, சிறப்பு பூஜைகள் செய்தனர்.காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள், நாளாயிர திவ்விய பிரபந்தங்கள் வாசிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழுங்க பெருமாள் தேர் வடம் பிடிக்கப்பட்டது. ராமானுஜ பக்தர்கள் நாமசங்கீர்த்தன பஜனை செய்தனர். தேரோடும் வீதிகளின் வழியாக பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இன்று(20ம் தேதி) தீர்த்தவாரி உற்சவமும், 22 ம் தேதி விடையாற்றி வைபவம் நடக்கிறது. பெருமாள் கோவில் கட்டளைதாரர்கள் உற்சவத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கோவிந்தசாமி, செயல் அலுவலர் கார்த்திகேயன் மேற்பார்வை செய்தனர். அர்ச்சகர் தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் திருவிழா பூஜைகளை செய்து வைத்தனர்.