பதிவு செய்த நாள்
25
ஏப்
2019
02:04
மின்ட்: பராமரிப்பு இன்றி, பாழடைந்த, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகர் கோவிலை, ஹிந்து அறநிலையத் துறையினர் புனரமைக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை, கொண்டித்தோப்பு, தங்கச் சாலை தெருவில், சிவசுப்ரமணிய சுவாமி மலைக்கோவில் உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.ஆந்திரா, பந்தர் என்ற ஊரில் இருந்து, சிவசுப்ரமணியர் மூலவர் சிலையை, திருப்போரூரைச் சேர்ந்த முருக பக்தர் ஒருவர், பிரதிஷ்டை செய்து, இங்கு எடுத்து வந்ததாக தல வரலாறு உள்ளது.
பின், 1850ல், இலங்கை, யாழ்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஆறுமுக நாவலர், ஆரம்பக் காலத்தில், சிறு குடிசை போல் இருந்த கோவிலை, திருப்பணிகள் செய்து, பல சன்னிதிகளை உருவாக்கியுள்ளார். மேலும், ஆறுமுக விலாசம் என்கிற மண்டபத்தையும் நிறுவி உள்ளார்.இக்கோவில் சுற்று பிரகாரத்தில், வீரபத்திரர், சண்டிகேஸ்வரர், குரு தட்ஷிணாமூர்த்தி, மஹா விஷ்ணு, சரஸ்வதி, பட்டினத்தார் ஆகிய தெய்வங்களும், வில்வ மரத்துடன் விநாயகர் மற்றும் நவக்கிரஹ சன்னிதி தனியாக அமைந்துள்ளன. மிகவும் சிறப்பு பெற்ற, சிவன் ஸ்படிக லிங்க உருவில், சுந்தரேஸ்வரர் என்ற நாமத்துடன் அருள் பாலிக்கிறார்.
பல சிறப்புகள் பெற்ற இக்கோவிலில், 2003ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், 16 ஆண்டுகளாகியும், இதுவரை கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.கோவிலின், 2வது வாசலைப் பயன்படுத்த முடியாத நிலையில், மதில் சுவரையொட்டி, உயரழுத்த மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 2வது வாசல் வாயிலில் குப்பை தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.கோவில் உட்புறம், கழிவுநீர், குளம் போல் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.கோவில் வளாகத்தில், 2016, வர்தா புயலுக்கு விழுந்த மா மரம் இன்னும் அகற்றப்படாமல், கோவில் உள்ளேயே போடப்பட்டுள்ளது. மேலும், கோவில் சுவர்களில் விரிசல் விழுந்து, அபாயகர நிலையில் காட்சியளிக்கிறது.கோவில் வளாகம் முழுவதும், பல இடங்களில் தரைகள் உடைந்தும், பெயர்ந்தும் பக்தர்கள் நடக்க முடியாத நிலையில் உள்ளது.
இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது:இரண்டாவது வாசல் பகுதியில் அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரை நவீனப்படுத்த வேண்டும்; குப்பை தொட்டிகள் மற்றும் கோவில் வளாகத்தில் விழுந்த மா மரத்தை அப்புறப்படுத்த வேண்டும். தரைகள், சுவர்கள் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.அபாயகரமாக உள்ள இக்கோவிலை, ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் பார்வையிட்டு, உடனடியாக, கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.