பதிவு செய்த நாள்
29
ஏப்
2019
12:04
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், கூடுதல் தகவல்கள் வெளியிட உள்ளதாக, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் உள்ள, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின், செயல் இணை அதிகாரி லட்சுமிகாந்தம் கூறியதாவது:திருமலை திருப்பதி தேவஸ்தான இணைய தளத்தில், திருமலை கோவிலை தவிர்த்து, தேவஸ்தானத்தின் கீழ் உள்ள மற்ற கோவில்களின் விபரங்கள், வாடகை அறை முன்பதிவு, தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு உள்ளிட்டவை வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் புதியதாக கூடுதல் தகவல்களை இணைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை, அன்னதானம், தலைமுடி சமர்ப்பித்தவர்களின் எண்ணிக்கை, உண்டியல் வருமானம் ஆகிய விபரங்களையும் இணையதளத்தில் பதிவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.பக்தர்களிடம் கருத்து பெற்று, மேலும் இணையதள பக்கங்களை மெருகேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவில் சம்மந்தப்பட்ட புகைப்படங்கள், வீடியோ பதிவுகளும் இணையதளத்தில் பதிவேற்றப்பட உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.