பதிவு செய்த நாள்
29
ஏப்
2019
12:04
ஈரோடு: புன்செய்புளியம்பட்டி அருகே, விஷ ஜந்துகளின் களிமண் சிலைகளை உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, காவிலி பாளையத்தை அடுத்த, அலங்காரிபாளையத்தில், 300 ஆண்டுகள் பழமையான, அய்யா கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில் வரும், ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் விழா நடக்கும். இதில், பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகளின், களிமண் உருவ சிலைகளை உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையான நேற்று, அதிகாலை முதலே, பக்தர்கள் வரத் துவங்கினர். கோவில் வளாகத்தில், ௧௦ ரூபாய்க்கு விற்கப்பட்ட, விஷ ஜந்துகளின் மண் உருவ பொம்மைகளை, விலைக்கு வாங்கினர்.அய்யன், கருப்பராயன், தன்னாசியப்பன் மற்றும் பாம்பாட்டி தெய்வங்கள் முன் வைத்து வழிபட்டனர். பின், கற்பூரம் ஏற்றி வழிபட்டு, விஷ ஜந்து பொம்மைகளை, கல்லில் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.இவ்வாறு செய்தால், வீடு மற்றும் தோட்டப் பகுதிகளில், விஷ ஜந்துகள் தென்படாது; மனிதர்களையும் விஷ ஜந்துகள் தீண்டாது என, பக்தர்கள் தெரிவித்தனர். ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்காக, பல பகுதிகளில் இருந்து, அரசு சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.