மறைக்கப்பட்ட அம்மன் சிலை: 104 ஆண்டுக்கு பின் சுவரை உடைத்து மீட்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2019 01:04
மேலுார்: மதுரை மாவட்டம் மேலுாரில் 104 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டு சுவரில் மறைத்து வைக்கப்பட்ட துரோபதையம்மன் ஐம்பொன் சிலை நேற்று மீட்கப்பட்டு கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.
மேலுார் துரோபதையம்மன் கோயில் பூஜாரி நாராயணன். இவர் கடந்த ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேலிடம் கொடுத்த புகாரில், ‘இந்த கோயிலின் உற்ஸவர் சிலை, ஒட்டியானம் உட்பட நகைகள், பத்திரங்கள் 1915 பிப்., 3 ல் திருடு போயின. அப்போது பூஜாரியின் உதவியாளராக இருந்த கந்தசாமி அவற்றை திருடினார். சிலை தொடர்பாக கந்தசாமியின் பேரன் முருகேசன் சில தகவல்களை கூறி உள்ளார். ‘மேலுார் நகை கடை பஜாரில் வசித்த வீட்டு சுவரில் சிலை மறைத்து வைக்கப்பட்டுள்ளது’ என குறிப்பு ஒன்றை கந்தசாமி எழுதி வைத்திருப்பதாக முருகேசன் கூறுகிறார். சுவரை உடைத்து சிலையை மீட்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
அந்த குறிப்பில் உள்ள தகவல்படி நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., மலைச்சாமி தலைமையில் போலீசார், வி.ஏ.ஒ.,ரவிசந்திரபிரபு தலைமையில் அந்த வீட்டின் சுவரை கோயில் நிர்வாகிகள் உடைத்தனர். அதில் அலமாரி போல அமைப்பில் இரண்டரை அடி உயர துரோபதையம்மன் சிலை மறைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை மீட்டு கோயிலில் வழிபாடு செய்தனர்.
இதுகுறித்து பூஜாரி நாராயணன் கூறியதாவது: 700 ஆண்டு பழமையான ஐம்பொன் உற்ஸவர் சிலையின் நெற்றியில் கண் உள்ளது. சகாதேவன் என்பவர் பூஜாரியாக இருந்த போது கேரளாவில் இருந்து சிலை கொண்டு வரப்பட்டதாக எனது தாத்தா நாராயணன் குறிப்பு எழுதி உள்ளார். தாத்தாவிடம் உதவியாளராக இருந்த கந்தசாமி, சிலையை திருடி சென்றதாக அப்போதைய ெஹட்மேனிடம் புகார் அளிக்கப்பட்டது. சிலையை மீட்க தொடர்ந்து போராடினோம், என்றார்.