ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், உலக நன்மைக்காகவும், உலக மக்கள் நலன் வேண்டியும், நல்ல மழை வளம் வேண்டியும் திருவாசக முற்றோதல் பெருவிழா நடைபெற்றது. விழாவில் திருக்கழுக்குன்றம் சிவ தாமோதரன், சிவ துறவி ராஜம்மாள் சங்கரன் உட்பட ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் காலை 7 மணிக்கு திருக்கைலாய வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை சுற்றி வந்து சித்திரசபையை அடைந்தனர்.
காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்களை கொண்டு திருவாசக முற்றோதுதல் பெருவேள்வி நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் முதன் முறையாக நடைபெற்ற திருவாசக முற்றோதுதல் விழாவில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆ ந்திர மாநிலம் காளஹஸ்தி, ஸ்ரீ சைலம், ஆகிய ஊர்களில் இருந்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இதில் கலந்து கொண்டனர். புலவர் பாலகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி திருக்கோவில் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கோவில் தக்கார் இளங்கோவன், கோயில் செயல் அலுவலர் ஜவகர் உட்பட சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.