மேலூர் : மேலூர் துரோபதையம்மன் கோயிலுக்கு சொந்தமான மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கநகைகளை மீட்க சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் முன்வர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
பழமைவாய்ந்த இக்கோயிலில் அம்மன் சிலை 1915 பிப்., 3 திருடு போனது. அப்போதைய பூஜாரி நாராயணன் புகார் அளித்தார். சில மாதங்களுக்கு முன் கோயில் சொத்துக்களை திருடியதாக கூறப்பட்ட கந்தசாமி பேரன் முருகேசன் தெரிவித்த தகவலின்படி நேற்று முன்தினம் 29 ல், கந்தசாமி வசித்த வீட்டு சுவரில் மறைத்து வைக்கப்பட்ட அம்மன் சிலை மீட்கப்பட்டது. இதுபோல கோயிலுக்கு சொந்தமாக மாயமான தங்கநகைகள் உள்ளிட்ட மற்ற பொருட்கள் மீட்கப்படவில்லை.இதுகுறித்து தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர் நோபல் பரிசு கூறியதாவது:சிலை மீட்கப்பட்ட வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் தொடர்ந்து சோதனையிட வேண்டும். மாயமானதாக கூறப்படும் அம்மனின் தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களை மீட்க வேண்டும் என்றார்.